செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது 1995ஆம் வருடம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுபவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் விருது தொகையும் ஒரு பவுன் தங்கப் பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இந்த விருதாளர் முதல்வர் அவர்களால் தேர்வு செய்யப்படுகின்றார்கள்.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2022 ஆம் வருடத்திற்கான விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. அதனால் சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதற்காக செய்த சாதனைகள் போன்ற தகுதிகள் உடையவர்கள் இந்த விருந்துக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இதற்கு தேவையான ஆவணங்கள் தங்களது விண்ணப்பம் தங்களின் பெயர், பிறந்த இடம் மற்றும் நாள், தாய் தந்தை மற்றும் குடும்ப விவரம், தற்போதைய முகவரி, கல்வி தகுதி, இனம் மற்றும் ஜாதி, தொழில், சமூக நீதிக்காக பாடுபட்ட விவரம், பெரியார் கொள்கையில் உள்ள ஈடுபாடு சமூக சீர்திருத்தக் கொள்கை பற்றி சிறுகுறிப்பு கலை இலக்கியம் சமூக பணி போன்றவற்றில் உள்ள ஈடுபாடு பற்றி சிறு குறிப்பு மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதனை விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 31.10.2022 ஆகும். மேற்படி தகுதியுடைய நபர்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன் பெற்றுக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.