இந்தியாவில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கேரளாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கேரள அரசு தடை விதித்துள்ளது. மேலும் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக நேற்று முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் சபரிமலை பக்தர்களுக்கு பொருந்தாது என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து சபரிமலை ஐய்யப்ப கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் மண்டல பூஜைக்கு உலகின் பல்வேறு பகுதியிலிருந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அதனைப் போலவே இந்த ஆண்டும் டிசம்பர் 26ஆம் தேதி நடந்து முடிந்த மண்டல பூஜைக்கு பக்தர்கள் திரண்டு தரிசனம் மேற்கொண்டனர். மேலும் மண்டல பூஜை முடிந்தவுடன் அன்று இரவு கோவில் நடை அடைக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது நடைபெற உள்ள மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது.
எனவே சபரிமலை நடை திறக்கப்பட்டதால் இன்று முதல் சுவாமி தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் மற்றும் RT-PCR பரிசோதனையின் சான்றிதழைக் கொண்டு வர வேண்டும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில் அன்று மாலை 6 மணிக்கு பொன்னம்பல மேட்டில் ஜோதி தரிசனத்தை காண்பதற்காக பக்தர்கள் அதிகமாக கூதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.