நீதித்துறை பல்வேறு வழக்குகளையும், தீர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடுவதை முன்னிட்டு நீண்ட காலமாக வழக்கில் இருந்த சபரிமலை தீர்ப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.கடந்த 1990ஆம் ஆண்டு, எஸ்.மஹேந்திரன் என்பவர், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கூடாது என்று கோரிக்கை விடுத்து கேரள மாநில உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதை தொடர்ந்து, இவரின் மனுவினை விசாரித்த உயர் நீதிமன்றம், 1991ஆம் ஆண்டு, சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்ல தடை என்று உத்தரவு பிறப்பித்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி இளம் வழக்கறிஞர்கள் சங்கம், சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவர்களின் கோரிக்கையினால், பல ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்த சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படலாமா கூடாதா என்பது குறித்த கேள்வி மீண்டும் எழுந்தது. இதற்கு ஆதரவாக சில அரசியல் கட்சிகளும் குரல் எழுப்பியது. இந்த வழக்கினை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு, கடந்த 2016ஆம் ஆண்டு, பெண்களுக்கு சபரிமலை கோவிலுக்குள் அனுமதியளிக்க மறுப்பது ஏன் என்ற கேள்வியை முன்வைக்க, கேரள மாநிலத்தில் அப்போது ஆட்சியில் இருந்த முதலமைச்சர் உம்மன் சாண்டி தலைமையிலான அரசு, அது மக்களின் நம்பிக்கை என்றும் அவரவர் மதத்தின் மீதுள்ள நம்பிக்கையை கேள்வியெழுப்பது சரியில்லை என்று பதிலளித்தது.
இதனையடுத்து இந்த வழக்கில் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்விடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது 4:1 என்ற விகிதத்துடன், மிக பழமையான இந்து முறையை தற்போதும் பின்பற்றுவது சரியல்ல என்றும், சபரிமலை கோவிலுக்கு செல்ல பெண்களுக்கு உரிமை உண்டு என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான தீர்ப்பு 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி வழங்கப்பட்டது. அதன்பிறகு 65 மறுஆய்வு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த மனுக்கள் குறித்த விசாரணையில் ஈடுபட்டிருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்த வழக்கை 7 பேர் கொண்ட அமர்விற்கு மாற்றியிருப்பதாகவும், அதற்கான தீர்ப்பு வழங்கப்படும் வரை பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல எந்த தடையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.