இந்த வருடம் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மாலை நடை திறக்கப்படுகிறது. அதன்பிறகு 16ஆம் தேதி முதல் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்றது. பெரும்பாலான மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். ஆனால் கடந்த வருடம் கொரோனா பரவலை தொடர்ந்து பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
அதனால் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் மண்டல,மகர விளக்கு பூஜைகளுக்காக நாளை மாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். 16ஆம் தேதி முதல் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்யும் பக்தர்கள் வராமல் இருந்தால் உடனே முன்பதிவு செய்யாத பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக நிலக்கல் பகுதியில் முன்பதிவு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில்தான் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டும். அங்கிருந்து கேரள அரசு பேருந்து மூலம் தான் பம்பைக்கு செல்ல வேண்டும்.ஓட்டுனர் உள்ள வாகனங்களில் வரும் பக்தர்கள் பம்பை வரை செல்ல முடியும்.அங்கு அவர்களை இறக்கிவிட்டு விட்டு டிரைவர்கள் வாகனத்துடன் திரும்பி வந்துவிட வேண்டும்.மேலும் சன்னிதானத்தில் தங்குவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.