சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது. 5 நாட்கள் நடை திறந்திருக்கும் நிலையில் தினமும் 250 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 7 மாதங்களாக சபரிமலை ஐயன் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. மேல்சாந்தி, சுதீர் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். ஐயப்பன் கோவில் தந்திரி, திரு. கண்டரரு, ராஜீவரரு பிரசாதம் வழங்குவார். இன்று இரவு கோவில் நடை அடைக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து நாளை அதிகாலை 5 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். வரும் 21-ஆம் தேதி இரவு நடை அடைக்கப்படும். 5 நாட்கள் நடை திறந்திருக்கும் நிலையில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தினமும் 250 பக்தர்கள் வீதம் மொத்தம் 1,250 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.