சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக இன்று நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஒவ்வொரு மாதமும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் இல்லாமல் பூஜைகள் அனைத்தும் நடத்தப்பட்டு வந்தன. சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை மிகவும் முக்கியமான ஒன்று. அந்த மண்டல பூஜை அடுத்த மாதம் நடைபெற இருப்பதால், பக்தர்களை கோவிலில் அனுமதிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு, கேரள அரசிற்கு பரிந்துரை செய்திருந்தது. அதற்கு கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதுமட்டுமன்றி மண்டல பூஜைக்கு முன்னர், ஐப்பசி மாத பூஜையின்போது பக்தர்களை அனுமதிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக நேற்று மாலை 5 மணியளவில் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. பிறகு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை முடிந்த பின்னர், மீண்டும் இரவு நடை சாத்தப்பட்டது. இன்று தொடங்கி 21ஆம் தேதி வரையில் நடைபெற உள்ள ஐப்பசி மாத பூஜைக்கு, பக்தர்கள் அனைவரும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சில கட்டுப்பாட்டு விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆன்லைனில் முன்பதிவு செய்து வருகின்ற பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவர். அதே சமயத்தில் தினமும் 250 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.