காட்டு யானை தாக்கியதால் முதியவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான ராஜ்குமார், கருப்புசாமி ஆகியோருடன் கடந்த 21-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பங்களா குழி என்ற இடத்திற்கு சென்றுள்ளார். அங்கே இருக்கும் தனியார் எஸ்டேட்டில் இருந்து 3 பேரும் திருட்டுத்தனமாக சந்தன மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்தனர்.
இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி சுற்று தூம்புபள்ளம் வனப்பகுதி வழியாக மூன்று பேரும் 4 கிலோ சந்தனக் கட்டையை எடுத்துக்கொண்டு நடந்து வந்தனர். அப்போது புதரில் இருந்து வெளியே வந்த காட்டு யானை 3 பேரையும் துரத்தி சென்றது. இதில் யானை தாக்கியதால் ராமர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மற்ற 2 பேரும் மேட்டுப்பாளையத்துக்கு வந்து போலீஸ் விசாரணைக்கு பயந்து ராமர் குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்தனர்.
ஆனால் கருப்புசாமி மன உளைச்சலில் சிறுமுகை காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அழுகிய நிலையில் கிடந்த ராமரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.