மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு அருகே புங்கனூர் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் சத்துணவு ஆசிரியராக போதம்மாள் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சத்துணவு ஆசிரியரை மாற்றம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவை படித்த மாவட்ட ஆட்சியர் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து ஆய்வு நடத்தியுள்ளார்.
இந்நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திடீரென அரசு பேருந்தை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சத்துணவு ஆசிரியரை மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்த அரசு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இவர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதன்பிறகு மாணவர்களும், பெற்றோர்களும் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.