குப்பையில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையின் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் சேகரிக்கும் குப்பைகளை தொண்டுபட்டு என்ற இடத்தில் கொட்டி வைக்கின்றனர். நேற்று மாலை தொண்டுபட்டு குப்பைமேட்டில் 10-க்கு மேற்பட்ட நாய்கள் துணி போன்ற எதையோ இழுத்துக் கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் நாய்களை துரத்தி விட்டு அங்கு சென்று பார்த்த போது துணி சுற்றிய நிலையில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை சடலமாக கிடந்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குழந்தையை கொலை குப்பையில் வீசி சென்றார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.