மியான்மரியில் உள் நாட்டு போரின்போது லட்சக்கணக்கான ரோகிங்கியா இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் அகதிகளாக மாறினர். மியான்மரிலிருந்து வெளியேறி ரோகிங்கியாக்கள் அண்டைநாடான வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து வங்காளதேசத்திலிருந்து சட்டவிரோதமாக வட கிழக்கு மாநில எல்லைகள் வழியே இந்தியாவுக்குள் நுழைந்து போலி அடையாளங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு இந்தியாவில் சட்டவிரோதமாக வாழ்ந்துவரும் ரோகிங்கியாக்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திரிபுரா மாநிலம் அகர்தலா நகரில் ரோகிங்கியாக்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாக இராணுவ உளவுத்துறை வாயிலாக திரிபுரா மாநில காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இத்தகவலை அடுத்து நேற்று அதிரடி சோதனை நடத்திய காவல்துறையினர் அகர்தலா ரயில் நிலையத்தில் 8ரோகிங்கியா அகதிகளை கைது செய்தனர். அதாவது, முகமது யுசப் (23), அவரது மனைவி மினரா (30), சயதுநூர் (25), அவரது மனைவி சாஹத் அரா (21), ஜனத் அரா (20), 3 குழந்தைகள் என மொத்தம் 8 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைதான அனைவரும் வங்காளதேசத்திலிருந்து ஏஜெண்ட்கள் வாயிலாக சட்டவிரோதமாக திரிபுரா எல்லை வழியே இந்தியாவுக்குள் நுழைந்து இருக்கின்றனர். அவ்வாறு திரிபுரா நுழைந்த 8 பேரும் டெல்லி போக திட்டமிட்டு அதற்காக ரயில் நிலையத்திற்கு வந்து உள்ளனர். டெல்லி போவதற்காக குடும்பத்துடன் அகர்தலா ரயில் நிலையம் வந்த அந்த அகதிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.