தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 825 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றுள்ளது. இந்த சிறப்பு நீதிமன்றம் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர், கமுதி, திருவாடனை ஆகிய இடங்களில் 9 அமர்வுகளின் கீழ் நடைபெற்றது. இந்நிலையில் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி சண்முகசுந்தரம் தலைமையில், மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சுபத்ரா, கூடுதல் மாவட்ட நீதிபதி சீனிவாசன், முதன்மை குற்றவியல் நீதிபதி கவிதா சப்-கோர்ட்டு நீதிபதி கதிரவன், நீதித்துறை நடுவர் கோர்ட் நீதிபதி சிட்டி பாபு ஆகியோர் அமர்வு முன்பு வழக்குகள் விசாரிக்கபட்டுள்ளது.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் காசோலை வழக்குகள், விபத்து, குடும்ப பிரச்சனை, நிலத்தகராறு, முன் விரோதம் உள்ளிட்ட நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதன்படி 1,420 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் 825 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 கோடியே 67 லட்சத்து 52 ஆயிரத்து 939 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு செய்ய இயலாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.