இலவசம் வேண்டாம் என கூறுபவர்களே அவர்கள் ஆளும் மாநிலங்களில் இலவச திட்டங்களை கொடுத்து வருவதாகவும், இரட்டை வேடங்களை, தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கிறார்கள் எனவும் கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பா.ஜ.க-வை சுட்டிக் காட்டினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற மாதம் 15ம் தேதி கோவை வந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள இருந்தார். இதையடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து முதல்வரின் கோவை பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 24ம் தேதி கோவை வருகிறார். அங்கு நடைபெற இருக்கும் அரசு விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க இருக்கிறார். இதனால் முதல்வர் கோவை வருவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உள்ளிட்ட பல அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “வரும் 23-ஆம் தேதி 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முதல்வரை வரவேற்க இருக்கின்றனர். பின் 24ம் தேதி நடைபெறும் அரசு விழாவில் கிணத்துகவு பகுதியில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 641 பேருக்கு நலத்திட்டங்களை வழங்கி புதிய திட்டங்களையும் முதல்வர் தொடங்கி வைக்க இருக்கிறார். அதனை தொடர்ந்து பொள்ளாச்சியில் முதல்வர் தலைமையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மாற்றுக் கட்சியினர் தி.மு.க-வில் இணைய இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கிடையில் 100 யூனிட் மின்சாரமானது ஏழை,எளிய மக்களுக்காக வழங்கப்பட்டது. அதேபோல்தான் மடிக்கணினி, சைக்கிள் போன்றவை வழங்கப்பட்டன. ஆகவே இலவசம் அடித்தட்டு மக்களை கை கோர்த்து அழைத்து செல்கிறது. அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என கூறிய அவர், அடித்தட்டு மக்களின் வாழ்க்கைதரம் மேம்படுத்துவதே தமிழ்நாடு அரசின் இலக்கு என தெரிவித்தார். இலவசத் திட்டங்களுக்கு சில பேர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் இலவசம் வேண்டாம் என கூறுபவர்களே அவர்கள்ஆளும் மாநிலங்களில் இலவச திட்டங்களை கொடுத்து வருகின்றனர். ஆகவே அவர்கள் இரட்டை வேசங்களை தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டினார். அதுமட்டுமின்றி முதல்வர் வருகைக்கு நாங்கள் கொடிகள் மற்றும் பேனர்களும் வைப்பது இல்லை.
முதலமைச்சருக்காக நாங்கள் போஸ்டர் ஒட்டியதுக்கு அந்த போஸ்டரின் மீது போஸ்டர் ஓட்டுவோம் என கூறுவது எப்படி என கேள்வி எழுப்பினார். அத்துடன் போஸ்டர் ஒட்டும் விவகாரத்தில் அதிகாரிகளை மிரட்டும் தோனியில் ஒரு கூட்டம் செயல்படுவதாகவும், அவர்கள் மீது வழக்கு பதியப்படுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பா.ஜ.க-வினர் தங்களின் இருப்பைக்காட்ட செயல்படுகின்றனர். இனி யாராவது கோவையில் சட்டத்தை கையில் எடுத்தால் அரசு வேடிக்கை பார்க்காது என எச்சரிக்கை விடுத்தார். அவர்கள் கட்சியினர் அவர் கோவை வரும்போது போஸ்ட் ஓட்டுகிறார்கள். அதனை தடுக்கிறோமா என கேள்விகேட்ட அவர் யாராவது வன்முறை சம்பவத்தில் ஈடுப்பட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.