பேருந்தில் இருந்து கீழே விழுந்து கண்டக்டர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரசு டவுன் பேருந்து ஏற்காடு அடிவாரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சீனிவாசன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். இந்நிலையில் பசுவக்கல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ராஜேந்திரன் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்துள்ளார். இதனை அடுத்து நாய் குறுக்கே வந்ததால் சீனிவாசன் சடன் பிரேக் போட்டுள்ளார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜேந்திரனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.
ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் ராஜேந்திரனை பேருந்தில் ஏற்றி கொண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜேந்திரனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜேந்திரன் கீழே விழும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.