தமிழகத்தில் சசிகலா தீட்டியுள்ள 2 திட்டங்களால் அதிமுக அமைச்சர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் சசிகலா இரண்டு திட்டங்களை வைத்திருப்பதாக அவரின் ஆதரவாளர் கூறியுள்ளார். அதில் அதிமுகவின் பொதுச் செயலாளர் இடத்தை எப்படியாவது பிடித்து விடவேண்டும், கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும், அதற்காக சிலவற்றை விட்டுக் கொடுக்கவும் தயார் என சசிகலா முடிவு செய்துள்ளார். இது நடக்கவில்லை என்றால் இரண்டாவது திட்டமாக அமமுக-வின் தலைவராக சசிகலா, பொதுச்செயலாளராக தினகரன் என வருகின்ற சட்டமன்ற தேர்தலை சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து சந்திக்க உள்ளார்.
அதன்படி அமமுக வெற்றி பெறாவிட்டால், குறைந்தபட்சம் 60 தொகுதிகளில் திமுகவுக்கு அடுத்து, இரண்டாவது இடத்துக்கு வர முடியும் என சசிகலா கருதுகிறார். இப்படி அதிமுக கட்சி இரண்டு அணிகளாக பிளவு பட்டால் சசிகலா நினைத்தது நிறைவேறி விடும் என அவர் கணக்குப் போடுகிறார். இந்த திட்டத்தை அறிந்த அதிமுக அமைச்சர்கள் அனைவரும் கலக்கத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.