2000 ஆண்டுகளுக்கு முன்பு சங்க கால மக்கள் பயன்படுத்திய பழமையான பொருட்களை தொல்லியல் ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் கள ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் 2000 ஆண்டுகள் பழமையான பொருட்களை கண்டறிந்தார். இவை சங்க கால மக்கள் பயன்படுத்தியது ஆகும். இதுகுறித்து இமானுவேல் கூறியதாவது, சங்ககால மக்கள் பயன்படுத்திய கெண்டி மூக்கு பானை, சுடுமண் தாங்கி, அகல் விளக்கு, குறியீடு உள்ள பானை, ஓடு சிவப்பு நிற வழவழப்பான உடைந்த பானைகள், சுடுமண் பழுப்பு, சிதைந்த நிலையில் 5-க்கும் மேற்பட்ட உறை கிணறுகள், பானையின் மூடிகள், முதுமக்கள் தாழியின் உடைந்த பானைகள், சங்க கால செங்கற்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே சங்க கால மக்களின் வாழ்விடமாக தென்பெண்ணை ஆற்றங்கரை இருந்துள்ளது என்பதை தொல்லியல் தடையங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.