புகழ்பெற்ற சங்கரநயினார் கோவில் அமைந்துள்ள பகுதியே சங்கரன்கோவில் ஆகும். மலர் விவசாயமும், விசைத்தறியும் முக்கிய தொழில்களாக உள்ளன. தென்காசி மாவட்டத்தில் ஒருபுறம் குற்றால அருவியால் செழிக்கும் இடங்கள் இருந்தாலும் மிக வறண்ட பகுதியான சங்கரன்கோவில் காட்சியளிக்கிறது. சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 3 முறையும், திமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 9 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது.
தற்போது அதிமுகவின் ராஜலட்சுமி எம்எல்ஏவாக உள்ளார். இவர் தற்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும் உள்ளார். தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,45,181 ஆகும். 2012ஆம் ஆண்டு இடைத்தேர்தலின் பரப்புரையின் போது சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது தவிர வேறு எந்த பணிகளும் நடைபெறவில்லை.
மானுர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும், பல கிராமங்களில் அதுவும் கிடைப்பதில்லை என்றும் மக்கள் புகார் கூறுகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள செண்பகவல்லி அணையை தூர் வாரி தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாகும். மல்லிகை, பிச்சி பூக்கள் அதிகளவில் விளைவிக்கப்படுவதால் வாசனை திரவிய தொழிற்சாலை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
ஜி.எஸ்.டி வரி விலக்கு அளிக்க வேண்டும், இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நெசவாளர்கள் முன் வைக்கின்றனர். அமைச்சரின் தொகுதி என்ற போதிலும் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை வசதிகள் என அனைத்து வகையிலும் பின்தங்கிய தொகுதியாகவே உள்ளதாக தொகுதியின் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தொடர்ந்து 30 ஆண்டுகளாக தன்வசம் உள்ள சங்கரன்கோவில் தொகுதியை அதிமுக தக்க வைக்குமா, அதிமுகவின் தொடர் வெற்றிக்கு திமுக முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை அறிய தேர்தல் வரை காத்திருப்போம்.