பள்ளி மாணவிகளை கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கண்டிபுதூர் பகுதியில் வினோத்(21) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ்(19) என்ற நண்பர் உள்ளார். இருவரும் ஈரோட்டில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வினோத்தும் சந்தோஷம் இணைந்து கண்டிபுதூர் பகுதியை சேர்ந்த அக்காள் -தங்கையான 17 மற்றும் 15 வயது சிறுமிகளை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளனர். மேலும் இரண்டு பேரும் இணைந்து சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த சிறுமிகளின் பெற்றோர் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனியார் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 2 சிறுமிகளையும் மீட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 10 மற்றும் 8-ஆம் வகுப்பு படிக்கும் சகோதரிகள் பள்ளி விடுமுறையில் ஈரோட்டில் இருக்கும் ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது வினோத் சந்தோஷ் ஆகிய இரண்டு பேரும் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற சகோதரிகளை கடத்தி சென்று விடுதியில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் வினோத் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.