கோவை விமான நிலையத்தில் விமான பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் சரக்கு ஏற்றுமதியும் உயர்ந்து வருகிறது. கொரோனா பரவல் சற்றே தணிந்து வரும் நிலையில் தற்போது கோவை சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் மற்றும் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் 5 விமானங்கள் இயக்கப்பட்டு நிலையில் தற்போது 26 விமானங்கள் வரை இயக்கப்படுகின்றன. நடப்பாண்டில் கோவை விமான நிலையத்தில் இருந்து பல புதிய விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
மேலும் இதனால் வரும் டிசம்பர் மாதம் விமான பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சம் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் கோவை விமான நிலையம் பிஸியாக உள்ளதாக கூறியுள்ளார். இதன் மூலம் உள்நாட்டு விமானங்கள் 20க்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலும் வெளிநாட்டு விமானம் சார்ஜாவுக்கு மட்டும் இயக்க படுவதாகவும் அவர் கூறினார்.
உள்நாட்டு விமான பிரிவில் மும்பைக்கு 7 விமானங்களும், சென்னைக்கு நான்கு விமானங்களும்,பெங்களூருக்கு 3 விமானங்களும், ஹைதராபாத்துக்கு 2 விமானங்களும், மற்றும் டெல்லி 3 விமானங்களும் இயக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். சரக்கு விமானங்களை பொருத்தவரை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சுமார் 70 டன் சரக்கு கோவை விமான நிலையத்தில் கையாளப் பட்டதாகவும், பயணிகள் விமானத்தை பொருத்தவரை 58 ஆயிரம் பேர் சென்னையில் இருந்தும், 12000 பேர் திருச்சியிலிருந்தும் 13 ஆயிரம் பேர் தூத்துக்குடியில் இருந்தும் பயணம் செய்ததாக தெரிவித்தார்.