தனியார் விரைவு ரயிலின் கட்டண விலையால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் அமைந்திருக்கும் சாய்பாபா கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருடம் தோறும் செல்கின்றனர். இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து சீரடிக்கு நேரடியாக ரயில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் பிரதமர் மோடியின் பாரத் கௌரவ் என்ற திட்டத்தின் கீழ் 5 நகரங்களில் இருந்து சீரடிக்கு நேரடியாக தனியார் விரைவு ரயில் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி வருகிற ஜூன் 14-ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து சீரடிக்கு நேரடியாக விரைவு ரயில் செல்ல இருக்கிறது. இந்த தனியார் விரைவு ரயிலை எம்.என்.சி ப்ராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் இயக்குகிறது.
இதற்கான கட்டண முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில் தனியார் விரைவு ரயிலின் கட்டணத்தால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். ஏனெனில் அரசு வசூலிக்கும் கட்டணத்தை விட தனியார் ரயில்களில் அதிக அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி சீரடிக்கு செல்வதற்கு ஸ்லீப்பர் கட்டணம் சாதாரணமாக 1,280 ரூபாய் வசூலிக்கப்படும். ஆனால் தனியார் ரயில்களில் 2,500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதனையடுத்து மூன்றடுக்கு குளிர்சாதன படுக்கைக்கு சாதாரணமாக 2,360 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், தனியார் ரயில்களில் 5,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதன்பிறகு குளிர்சாதன முதல் வகுப்பு படுக்கைக்கு 8,190 ரூபாய் கட்டணமாக இருந்த நிலையில் தனியாரில் 10,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்பிறகு இரண்டடுக்கு குளிர்சாதன படுக்கைக்கு 4,820 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், தனியார் ரயில்களில் 7,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் தனியார் ரயில்களில் கட்டணக் கொள்ளை நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தனியார் மயமாக்குதல் என்பது மக்களை சுரண்டுவதற்கான நடவடிக்கைகள் எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.