கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
கோவை கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கார் வெடித்து சிதறியதில் ஜமேஷா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும் கார் வெடித்து சிதறிய இடத்தில் சிறிய அளவிலான இரும்பு குண்டுகள், ஆணிகள் உள்ளிட்டதை சிதறி கிடந்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டதை தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் பலியான ஜமேஷா முபின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அவரது வீட்டிலிருந்து வெடி மருந்துகளையும் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் கூடுதல் குற்றவாளிகளாக மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், ஜி எம் நகரை சேர்ந்த முகமது ரியாஸ், ப்ரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அதற்குப் பிறகு முபினின் பெரியப்பா மகன் அப்சர் கான் என்ற நபர் கைது செய்யப்பட்டார். இந்த குற்றவாளிகளை முதல் கட்டமாக 5 நபர்களையும் தனிப்படை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதற்காக திட்டமிட்டு அதன் அடிப்படையில் மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். மனு மீதான விசாரணை அடிப்படையில் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில் 3 நாட்கள் தனிப்படை விசாரணைக்கு பின்பு தற்போது கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 5ல் நீதிபதி சந்தோஷ் முன்பு 5 பேரையும் தனிப்படை போலீசார் 3 நாள் விசாரணைக்கு பிறகு ஆஜர்படுத்தினர்.
அந்த 5 பேருக்கும் ஏற்கனவே 8ஆம்தேதி வரை நீதிமன்ற காவல் தரப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். தனிப்படை போலீசார் பலத்த பாதுகாப்புடன் வந்து அவர்களை நீதிமன்றத்தில் அழைத்துச் சென்று நீதிபதி சந்தோஷ் முன்பு ஆஜர்படுத்தினர்..
இந்த 3 நாட்கள் ரகசிய இடத்தில் வைத்துதான் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. இந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருந்தது. அவர்கள் எங்கே சென்றார்கள்? யாரை சந்தித்தார்கள்? என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரித்துள்ளனர்.. இதற்கிடையே என்ஐ ஏ இந்த வழக்கை கையில் எடுத்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது..