கோவில்களில் நெய்வேத்தியம் மற்றும் பிரசாதங்கள் தயாரிப்பதற்கு ஆவின் நெய் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று அறநிலை துறை கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் இதர தேவைகளுக்கு ஆவின் நிறுவனம் மூலம் தயார் செய்யப்பட்ட நெய் மற்றும் வெண்ணெய் பொருள்கள் கொள்முதல் செய்ய உத்தரவிட பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் 15 மில்லி லிட்டர் முதல் 20 கிலோ வரை எடை கொண்ட அளவுகளில் ஆவின் நிறுவன தயாரிப்புகள் விற்பனைக்கு தயாராகி வருவதாக தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குனர் இந்து சமய அறநிலைத்துறை கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், கோவில்களில் பிரசாத்தின் தரத்தை மேம்படுத்தவும் கருவறை மற்றும் பிரகாரங்களில் தரமற்ற நெய்யைப் பயன்படுத்தி விளக்கு தீபம் ஏற்றுவதால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், அறநிலை துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் அனைத்தும்ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் போன்ற பொருள்களையும், பக்தர்களுக்கு நெய் விளக்கு ஏற்றுவதற்கு விற்பனை செய்யப்படும் நெய்யினையும் ஆவின் நிறுவனம் மூலம் மட்டுமே கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த திட்டம் வரும் புத்தாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.