கோவிலை புனரமைப்பதாக கூறி ‘யூ டியுப்’ மூலம் பொதுமக்களிடமிருந்து ரூ 44 லட்சம் பணத்தை வசூலித்து அபேஸ் செய்ததாக பா.ஜ.க ஆதரவாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மதுரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் 500 வருடங்கள் பழமையானது. இந்த கோவிலுக்கு சொந்தமான பகுதியில் பல இடங்களில் உப கோயில்கள் அமைந்துள்ளன. அதில் மலையடிவாரத்தில் இருக்கின்ற பெரியசாமி கோவிலில் சுடுமண்ணால் செய்யப்பட்ட நிறைய சிலைகள் அமைந்துள்ளன. அதில் பல சிலைகள் சேதம் அடைந்து காணப்படுகின்றன. இந்த பழமையான கோவிலையும், சிலைகளையும் புனரமைப்பதாக தெரிவித்து ஆவடியை அடுத்துள்ள முத்தாபுதுப்பேட்டை 3வது குறுக்கு தெருவில் வசித்த பா.ஜ.க ஆதரவாளரான கார்த்திக் என்பவர் இளைய பாரதம் என்ற பெயரில் யூட்யூப் மூலம் நிதி திரட்டி உள்ளார்.
இவர் ஐந்து மாதங்களாக வெளிநாடு உட்பட பல்வேறு பகுதியிலிருந்து கோவில் புனரமைப்பு என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து கார்த்தி கோபிநாத் ரூ 44 லட்சம் வாங்கி உள்ளார். ஆனால் அவர் அந்த பணத்தை கோவில் புனரமைப்பு பணிக்கு பயன்படுத்தவில்லை. இதுதொடர்பாக சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் அரவிந்தன் ஆவடியில் இருக்கின்ற மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் கார்த்தி கோபிநாத் கோவிலை புனரமைப்பது என்ற பெயரில் பொது மக்களை ஏமாற்றி யூ டியூப் மூலம் பணம் வசூலித்த அந்த பணத்தை தனது சுய லாபத்துக்காக பயன்படுத்தியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள்.
அதனடிப்படையில் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருக்கின்ற மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று முன்தினம் காலை கார்த்திக் கோபிநாத்தை கைது செய்துள்ளனர். அவர் மீது 406, 420, 66 ஐ.டி சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் மாலை அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தற்சமயம் கார்த்தி கோபிநாத் வங்கி கணக்கில் 3 1/2 லட்சம் மட்டுமே இருப்பதாகவும் மீதி உள்ள பணம் எங்கே என்பது குறித்து அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார்த்தி கோபிநாத் கைதானதை அறிந்து பா.ஜ.க நிர்வாகிகள் நேற்று முன்தினம் மதியம் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் திரண்டு அவருக்கு ஆதரவாக முழக்கங்கள் விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.