திருத்தணியில் அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். இதனால் கோவில் நிர்வாகம் பக்தர்களின் வசதிக்காக உணவகங்கள், கடைகள் மற்றும் விடுதிகள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதோடு கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு வசதியாக முக்கிய நகரங்களில் இருந்து பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கார்த்திகேயன் இல்லாம் மற்றும் தணிக்கை இல்லங்களில் பக்தர்களுக்காக குறைவான கட்டணங்களில் அறைகள் வழங்கப்படுகிறது. இந்த அறைகளில் பொதுமக்கள் தங்கி இருந்து விரதம் இருந்து முருகனை தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் கார்த்திகேயன் இல்லத்தில் அதிகாரிகள் இருவர் செய்த காரியம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோவில் நிர்வாகத்தின் உயர் பதவியில் இருக்கக்கூடிய வித்யாசாகர் மற்றும் கலைவாணன் ஆகிய 2 பேரும் சிக்கன், முட்டை, மீன் வருவல், சாப்பாடு என தடபுடலாக அசைவ விருந்து சாப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரதம் இருந்து தங்கி இருக்கும் அறைகளில் அதிகாரிகள் அசைவ உணவு சாப்பிடுவது நியாயமா என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்து அறநிலையத்துறைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் விடப்பட்டுள்ளது.