விவசாய நிலத்திற்குள் சிறுத்தை புகுந்ததால் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் தளி, தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி ஆகிய வனப்பகுதிகள் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் உணவு தேடி அருகில் இருக்கும் கிராமங்களுக்குள் புகுந்து விடுகிறது. இந்நிலையில் நேற்று பாலக்கோட்டை கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் தனக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் கோழிகளை அடைத்து வைத்துள்ளார். இதனையடுத்து திடீரென கோழிகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
இதனை கேட்ட வெங்கடாஜலம் அங்கு சென்று பார்த்தபோது வன விலங்கு ஒன்று வாயில் கோழியை கவ்வியபடி காட்டிற்குள் ஓடியுள்ளது. இதனையடுத்து வெங்கடாசலம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அதில் சிறுத்தை ஒன்று கோழியை வாயில் கவ்வியபடி காட்டிற்குள் ஓடிய காட்சி பதிவாகியுள்ளது. இதுகுறித்து வெங்கடாசலம் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.