ஷாஹித் அப்ரிடி கோலியின் ஆட்டத்தை பார்க்க ஆர்வமாக இருந்த நிலையில், சூர்ய குமார் ஆட்டத்தால் பிரமித்து போயுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று இன்னும் தோல்வியை சந்திக்காமல் இருக்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து, பின்னர் தனது இரண்டாவது ஆட்டத்தில் ஹாங்காங்கை வீழ்த்தியது. ஹாங்காங் அணிக்கு எதிராக விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்றனர்.
இப்போட்டி இந்திய ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்திருந்தது என்றுதான் சொல்லவேண்டும். இதில் அபாரமாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 6 சிக்சர் 6 பவுண்டர்கள் என 26 பந்துகளில் 68 ரன்களை விளாசி தள்ளினார். அதேபோல இவருக்கு உறுதுணையாக விராட் கோலியும் சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். சமீப காலமாக பார்ம் இல்லாமல் தவித்த கிங் கோலி இந்த ஆட்டத்தில் அற்புதமாக ஆடி 44 பந்துகளில் 59 ரன்கள் (3 சிக்ஸர், 1 பவுண்டரி) எடுத்தார். குறிப்பாக சூரியகுமார் யாதவ் கடைசி ஓவரில் 4 சிக்ஸர்கள் அடித்து அனைவரையும் பிரமிக்க வைத்திருப்பார். சூர்யாவின் இந்த ஆட்டத்தை கோலியே ரசித்து பார்த்தார்.
இதையடுத்து போட்டி முடிந்த பின் பெவிலியனை நோக்கி சூர்யகுமார் சென்றபோது, விராட் கோலி தனது நெஞ்சில் கையை வைத்து அவருக்கு சிரம் தாழ்த்தி வணங்கி கை கொடுத்து மரியாதை செய்தார். உலகின் தலைசிறந்த வீரரான கோலி வளர்ந்து வரும் சூர்யகுமாருக்கு மரியாதை கொடுத்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி பாராட்டுக்களை பெற்றது.
இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி கோலியின் ஆட்டத்தை பார்க்க ஆர்வமாக இருந்துள்ளார். ஆனால் அவர் சூர்ய குமார் ஆட்டத்தால் பிரமித்து போயுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, “ஆமாம், எனக்கு கிடைத்த குறைந்த நேரத்தில் டிவி பார்த்தேன். நான் விராட்டின் பேட்டிங்கைப் பார்க்க அமர்ந்திருந்தேன். இந்த இன்னிங்ஸ் தனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்த அவர் மெதுவாக விளையாடினார். எதிரணி எது என்பது முக்கியமில்லை. நீங்கள் ரன்களை எடுத்தால் அது எப்போதும் நம்பிக்கையைத் தரும். அதனால் அவர் அப்படி விளையாடிக்கொண்டிருந்தார், ஆனால் சூர்யகுமார் உள்ளே வந்ததும்… அவர் தனது முதல் பந்தை பவுண்டரிக்கு அடித்தார், பின்னர் இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்து எல்லாவற்றையும் தாக்கும் படியாக லைசென்ஸ் வாங்கிக்கொண்டு வந்தது போல ஆடினார்” என்று கூறினார்.
மேலும் “உடல் மொழி மிகவும் முக்கியமானது. நீங்கள் ஒரு சிங்கிள் எடுத்தாலும், பந்தை தடுத்து ஆடும் போதும் அல்லது சிக்ஸர் அடிக்கும் போதும் நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும் அந்த பெரிய ஷாட்களை அடிக்கும் போது அவர் காட்டிய நம்பிக்கை அபாரம். அவர் கூட்டத்தை மகிழ்வித்தார்,” என்று அப்ரிடி கூறினார்.