டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் தங்களது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
ஆறாவது ஊதிய குழு பரிந்துரை அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதனால் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் போராட்டத்தை கைவிட கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது,
இதை விசாரித்த நீதிபதி திரு நவீன் செவிலியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக எய்ம்ஸ் நிர்வாகம் உறுதியளித்துள்ள நிலையில் போராட்டத்தை மேலும் தொடர்ந்தால் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதனையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்துடன் செவிலியர் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக செவிலியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஒருவாரத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து வைக்கப்படும் என எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.