வீட்டில் சண்டை போட்டு வெளியே சென்ற தொழிலாளி கோவில் அருகே பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை சிவஞானபுரம் பகுதியில் விசுவநாதன்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு குடிபழக்கம் இருந்ததால் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விசுவநாதன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரதாதல் விசுவநாதனின் மகன் ராகுல் வெளியே தேடியதாக கூறப்படுகிறது.
அப்போது அதேபகுதியில் உள்ள கோவிலுக்கு பின்புறம் விசுவநாதன் பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கேணிக்கரை போலீசார் விசுவநாதனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசுவநாதன் தற்கொலை செய்துகொண்டார அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.