கோத்தப்பய ராஜபக்சேவுக்கு எந்தவிதமான சலுகைகளும் வழங்கப்படவில்லை என மந்திரி கூறியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கோத்தப்பய ராஜபக்சே கடந்த 13-ஆம் தேதி நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்றார். இதற்கு மாலத்தீவு மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் மறுநாள் கோத்தப்பய சிங்கப்பூருக்கு கிளம்பி சென்றார். இவருக்கு 14 நாட்கள் தங்குவதற்காக சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கி இருந்த நிலையில், தற்போது 14 நாட்கள் கூடுதலாக கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிங்கப்பூர் அரசு கோத்துப்பய ராஜபக்சேவுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், வெளியுறவு மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் கோத்தப்பய ராஜபக்சேவுக்கு எந்தவிதமான தனிச்சலுகைகளும், சட்ட பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என கூறியுள்ளார். அதன் பிறகு அரசியல்வாதிகள் தஞ்சம் கேட்கும் இடமாக சிங்கப்பூர் மாறிவிடுமோ என்று எதிர்க்கட்சி சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு உள்துறை மந்திரி கே. சண்முகம் வெளிநாடுகளில் இருந்து பயண உரிமத்துடன் வந்தால் அவர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஒரு நாட்டில் தேடப்படும் குற்றவாளியாக இருந்தால் அந்நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப சிங்கப்பூர் அரசு அவரை பிடிப்பதற்கு உதவி செய்யும் எனவும் கூறினார். மேலும் தேசத்தின் நலன் கருதி வெளிநாட்டில் இருந்து வரும் நபர்களை நாட்டிற்குள் அனுமதிக்காமல் இருப்பதற்கும் சட்டம் உண்டு எனவும் கூறினார்.