சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கும் திட்டம் ஆறு மாதத்தில் நிறைவு பெற உள்ளது. அனல் மின்நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு கடந்த ஆண்டை விட 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
வரும் கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடந்த 11 மாத காலத்தில் 3527 மெகா வாட் மின்சார கொள்முதலுக்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 72 டன் நிலக்கரி தமிழகத்திற்கு தேவைப்படுகிறது. ஆனால் மத்திய அரசு 48 டன் நிலக்கரி மட்டுமே வழங்குகிறது. எனவே நிலக்கரி தேவையை பூர்த்தி செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் நிலக்கரி விலை அதிகமாக இருக்கும் போதிலும் வரும் கோடை காலத்தை மட்டும் சமாளிக்கும் நோக்கில் இரண்டு மாதத்திற்கு மட்டும் நிலக்கரி வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.