கோடநாடு வழக்கில் சாட்சி ரவி மேல் விசாரணைக்கு தடை கோரிய மனு மீதான விசாரணை வரும் 7ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.
கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் அதிகாலை நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்..
இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து ஊட்டியில் தங்கியிருந்தார்.. அவருக்கு சம்மன் அனுப்பி போலீசார் விசாரணை நடத்தினர்.. அந்த விசாரணையில் சயான், அதிமுகவின் முக்கிய பிரமுகர்களுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருக்கிறது என்று தெரிவித்ததாக சொல்லப்படுகிறது..
இதனைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் காருக்கு முன்னாள் டிரைவராக பணியாற்றிய சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் அண்ணன் தனபாலுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டது.. இதில் கனகராஜ், கொடநாடு வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில், சம்பவம் நடந்த சில நாட்களிலேயே அவர் விபத்தில் சிக்கி இறந்து போனார். அதனை தொடர்ந்து கனகராஜின் அண்ணன் தனபால், தன்னுடைய சகோதரர் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி வந்ததால் அவரிடம் போலீசார் விசாரித்தனர்..
சயான் மற்றும் கனகராஜின் சகோதரரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ள நிலையில் இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி உதகை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம்.
அதனை தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2ஆம் தேதி உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சயான், மனோஜ் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.. அப்போது அரசு தரப்பில் கூடுதல் விசாரணைக்கு கால அவகாசம் கோரப்பட்டது.. இதனால் நீதிமன்றம் வழக்கு விசாரணையை அக்டோபர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது..
இதற்கிடையே இந்த வழக்கின் சாட்சிகளில் ஒருவரான கோவையைச் சேர்ந்த அனுபவ் ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.. அதில், இந்த வழக்கு தொடர்பாக தனக்கு கொலை மிரட்டல் வருகிறது, எனவே போலீசார் மேல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த 27ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மல் குமார் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் விசாரணைக்கு தடை கோரிய சாட்சி ரவியின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம். மேலும் கோடநாடு வழக்கில் மேல் விசாரணை நடத்த காவல் துறைக்கு அதிகாரம் உள்ளது. வழக்கு விசாரணை தாமதம் ஆனாலும் உண்மையை கண்டறிவதில் கூடுதல் விசாரணை உதவியாக இருக்கும் என்று கூறியது..
இதனை தொடர்ந்து ரவி உச்ச நீதிமன்றத்தில் மேல் விசாரணை நடத்துவதற்கு தடை கோரி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.. இந்த நிலையில் இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 7ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது..