லாரியில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அய்யாமனைப்பிரிவு பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விவசாய நிலங்களுக்கு அருகில் நெல் அறுவடை இயந்திரத்தை கொண்டு செல்ல பயன்படும் லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது எந்திரத்துடன் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநரான விஜி, ஆப்பரேட்டர் வேலு ஆகியோர் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்த போது லாரி தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஆப்பரேட்டர் வேலு அறுவடை இயந்திரத்தை வேகமாக கீழே இறக்கினார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் லாரியின் முன்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் லாரியின் பேட்டரி சூடாகி தீப்பிடித்து எரிந்தது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.