நூற்பாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள இயந்திரம் மற்றும் பஞ்சு எரிந்து சேதமடைந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்த்தை அடுத்துள்ள வெப்படை பகுதியில் தனியார் நூர்ப்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நூற்பலையில் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்த உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பரவியதால் வெப்படை மற்றும் குமாரபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஆலையில் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கொழுந்துவிட்டு எரிந்த தீ நூற்பாலையில் இருந்த இந்திரங்கள் மீதும் பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதனால் திணறிய தீயணைப்பு வீரர்கள் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களை வரவழைத்து தண்ணீரை பாய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சி செய்துள்ளனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நூற்பாலையில் பிடித்த தீயை முழுவதுமாக அணைத்துள்ளனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் ஆலையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மற்றும் இயந்திரங்கள் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து வெப்படை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.