‘கோவிட்-19’ (கொரோனா வைரஸ்) தொற்று காரணமாக ஜப்பானின் யோகோஹமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சொகுசு கப்பலில்உள்ள பயணிகள் வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ‘கோவிட்-19’ (கொரோனா வைரஸ்) எனப்படும் தொற்று நோய் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம், சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் காரணமாக இதுவரை சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, சீனாவில் இருந்து ஜப்பான் வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் வைரஸ் பாதிப்பு காரணமாக அந்நாட்டின் யோகோஹாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த சொகுசு கப்பல் தனிமைப்படுத்தி வைத்திருக்கும் காலக்கட்டம் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, ‘கோவிட்-19’ பாதிப்பு ஏற்படாதவர்களும், வைரஸ் தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களும் கப்பலை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கப்பலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 542 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கப்பலில் ‘கோவிட்-19’ தொற்று உள்ளவர்களுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்களை மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்தி வைப்பது குறித்து ஜப்பான் அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.