வேகமாகப் பரவும், குறைந்த அளவிலேயே கொல்லும் ஆற்றல் உடையதாக கொரோனா மாற்றமடைந்துள்ளது.
ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் பரவிக் கொண்டிருக்கும் திடீர் மாற்றம் பெற்றுள்ள கொரோனா வைரஸ், அதிக வேகமாக பரவக்கூடியதாக இருந்தாலும், குறைந்த அளவிலேயே கொல்லக் கூடியது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் மூத்த மருத்துவ ஆலோசகராக பணியாற்றி கொண்டிருக்கும் பால் தம்பையா டி614ஜி என்னும் சமீபத்தில் பரவிக் கொண்டிருக்கும் திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் காரணமாக உயிர் பலிகள் அதிகம் ஏற்படாது என்றும், அது குறைவாகவே கொல்லக்கூடியது என்பதற்கும் ஆதாரங்கள் இருப்பதாக கூறியுள்ளார்.
அதிகம் பரவினாலும் குறைவாகவே கொல்லக்கூடிய ஒரு வைரஸ், மிக நல்ல விஷயம் என்றும் கூறலாம் என தெரிவித்துள்ளார். திடீர் மாற்றம் தொடர்ந்து பெறுவதால், பெரும்பாலான வைரஸ்கள் வீரியம் குறைந்தவையாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் அதிக நபர்களை தொற்ற வேண்டும் என்பது வைரஸின் குணமாக இருந்தாலும், அவர்கள் அனைவரையும் கொல்வதற்கு அவை விரும்புவதில்லை. வைரஸ்கள் வாழ்வதற்கு சிறந்த இடமும் உணவும் கட்டாயம் தேவை.
வைரஸ்கள் உணவுக்காகவும், இருப்பிடத்திற்கும் மனிதனையே நம்பியிருப்பதால், அவை மனிதர்களை முழுவதுமாக அழித்து விட்டால், அவற்றிற்கு உணவும் இருப்பிடமும் கிடைக்காது என்ற காரணத்தால், மனிதர்களை கொல்ல விரும்புவதில்லை என்று அவர் கருத்து கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து உலக சுகாதார மையமும், வைரஸ்களில் ஏற்படும் திடீர் மாற்றம், அவற்றை அதிக வீரியம் உடையவையாக மாற்றுவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று கூறியிருக்கிறது.