சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மருத்துவர் பரிந்துரை இன்றி மருந்து விநியோகம் செய்து கொண்டிருந்த மருந்தக கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி தாலுகாவில் கொரோனா விதிமுறைகளை வியாபாரிகள் கடைபிடிக்கிறார்களா ? என தாசில்தார் திருநாவுக்கரசு தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அப்போது அங்கு மருத்துவர் பரிந்துரை இன்றி சிங்கம்புணரி பேருந்து நிலையம் முன்புறம் உள்ள மருந்து கடையில் மருந்துகள் விநியோகிக்கப்பட்டது தெரியவந்தது. அதோடு கையுறை, முக கவசம் இன்றி அந்த கடையில் மருந்துகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வாடிக்கையாளர்களும் மருந்து வாங்கி கொண்டிருந்தனர். இதையடுத்து தாசில்தார் அந்த மருந்து கடைக்கு “சீல்” வைக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகள் அந்த கடைக்கு “சீல்” வைத்துள்ளனர்.