கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் 15 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது
கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வூஹான் நகரில் கொரோனா தொற்று தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதிலும் 36,037,992 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 27,143,863 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 10,54,514 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் 2021 ஆம் வருடம் 15 கோடி மக்கள் கடுமையான வறுமையில் இருக்கக்கூடும். உழைப்பு, மூலதனம், திறன்களை பின்தொடர்வதன் மூலமாக அனைத்து நாடுகளும் வேறுபட்ட பொருளாதாரத்திற்கு தயாரான நிலையில் இருக்க வேண்டும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.
உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், “வணிகம் மற்றும் பிற துறைகளில் புதுமையான சிந்தனையை புகுத்துவதற்கு சிந்திக்க வேண்டும். இந்த வருடம் 8.8 கோடியிலிருந்து 15 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வறுமையில்சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இந்தியாவின் தரவுகள் இல்லாததால் உலக அளவிலான வறுமையை கணிப்பது தடைபட்டுள்ளது. மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியா பற்றி சமீபகால தகவல்கள் இல்லாமல் இருப்பது உலகளாவிய மதிப்பீட்டை நிச்சயமற்ற தன்மையாக மாற்றுகின்றது” என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.