சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கொரோனா தொற்று பரிசோதனை செய்யும் புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர்.
சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கொரோனா அறிகுறியை மிகவும் துல்லியமாக கண்டறிய உதவும் பரிசோதனைக்கு கையடக்கமான ‘பிரீத்லைசர்’ பரிசோதனை என்ற புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர். மேலும் கொரோனா அறிகுறி இல்லாமல் பாதிப்புக்குள்ளானால் வெறும் 5 நிமிடங்களில் இந்த பாதிப்பை கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
‘ஏசிஎஸ்நானோ’ பத்திரிக்கையில் இதுபற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது மாநாடுகள், திருமணங்கள் போன்றவற்றில் கலந்து கொள்கிற மக்களை விரைவாக பரிசோதனை செய்ய உதவும் என்பதே இதன் முக்கிய அம்சமாகும். இச்சோதனை முறையை சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதுபற்றி அவர்கள் கூறுகையில், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முறை மிகவும் மெதுவாக உள்ளதாகவும், மாதிரிகளை சேகரிக்க சங்கடமான ‘ஸ்வாப்’ தேவைப்படுவதாகவும் மற்றும் ஆய்வகத்தில் சோதனை செய்ய வேண்டும் எனவும் கூறுகின்றனர்.
எனவேதான் எல்லா விதத்திலும் வசதியாக உள்ள இந்த எளிய முறையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.கொரோனா பரவலை குறைப்பதில் இப்பரிசோதனை முறை முக்கிய கருவியாக செயல்படும் எனவும் இப்புதிய சோதனை முறையின் மூலம் சிங்கப்பூர் மருத்துவமனைகள், விமான நிலையங்களில் 507 பேருக்கு பரிசோதனை நடத்தியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.