கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு நீட்டிப்பதாக முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் கொரோனா இன்னும் கட்டுக்குள் கொண்டு வரவில்லை. அதுமட்டுமில்லாமல் தற்போது ஜிகா வைரஸ் எனும் நோயும் மாநிலம் முழுவதும் மிரட்டிக் கொண்டு வருகின்றது. இதனால் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும், பொது இடங்களில் முக கவசம் அணிந்து நடமாட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் முழு ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கேரள வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களின் கோரிக்கைக்கு முதல்வர் தெரிவித்துள்ளதாவது: அனைவரும் கடை மற்றும் வியாபார நிறுவனங்களை உடனே திறக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால் இப்போது சூழ்நிலை உகந்ததாக இல்லை. எனவே வியாபாரிகள் பொறுமையுடன் இருக்கவேண்டும். உங்களின் உணர்வுகளை நாங்கள் அறிவோம். சூழ்நிலை சரியானதும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.