தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 3 மாதத்திற்கு வீட்டு உரிமையாளர்கள் வாடகை வசூலிக்கக்கூடாது என உத்தரவிட முடிவெடுத்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர் கூறியதாவது, ” டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீகி ஜமாஅத் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட மதக்கூட்டத்தில் பங்கேற்ற 6 பேரை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல, காரைக்காலில் 3 பேரை கண்டறிந்துள்ளதாக கூறினார். இவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என தெரிவித்தார். அவர்களின் ரத்த மாதிரிகள் தற்போது பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறினார். கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற அனைவரும் தானாக முன்வந்து சிகிச்சைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், கொரோனா தோற்று நோய் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 3 மாதத்திற்கு வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் வாடகை பணம் வாங்கக்கூடாது என உரிமையாளர்களுக்கு உத்தரவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு சற்று மகிழ்ச்சியை அளிப்பதாக இருக்கிறது. முன்னதாக, வெளிமாநிலத்திலிருந்து வந்து தமிழகத்தில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள், மாணவர்களிடம் ஒரு மாத காலத்துக்கு வீட்டு வாடகை வாங்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், வீட்டு வாடகை கேட்டு கட்டாயப்படுத்தும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.