நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. தடுப்பூசி பயன்பாட்டால் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. அரசு மருத்துவமனைகள்,தனியார் மருத்துவமனைகள் மற்றும் தடுப்பூசி முகாம்கள் மூலம் மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் இன்னும் சில பகுதிகளில் ஏராளமானோர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். எனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டார் விகிதம் குறைவாக உள்ளது.அதனால் மக்களை தடுப்பூசி செலுத்தி கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் சந்திப்பூர் மாநகராட்சியில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விகிதத்தை அதிகரிக்க செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 12 முதல் 24ஆம் தேதி வரை தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு பிரிட்ஜ், வாஷிங் மெஷின்,டிவி உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் குலுக்கல் முறையில் வழங்கப்படும். மேலும் 10 பேருக்கு ஆறுதல் பரிசாக மிக்ஸி மற்றும் கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.