இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. கடந்த 6 நாட்களாகவே கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுமார் 571 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் தமிழகம் தொடர்ந்து 2ம் கட்டத்தில் உள்ளது.
3ம் நிலைக்கு போகக்கூடாது என ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் ஏப்.,14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பணிகளை தவிர மக்கள் வெளியே வர கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் பழனிசாமி மாநில அரசு மற்றும் அனைத்து மாவட்ட முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி அவ்வப்போது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. மேலும் பாதித்தவர்கள் எண்ணிக்கையானது உயரும் அபாயம் இருக்கும் நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காணொலி மூலம் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்றுள்ளனர்.