சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்ததால் கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்படும் ஆரம்பகட்ட பரிசோதனையில் இருந்து அவர்கள் குணமடைந்து வீடு திரும்பும் போது செய்யப்படும் பரிசோதனை வரையில் தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.பேரிடர் காலத்தில் உச்ச நீதிமன்றம் விதித்து இருக்கின்ற வழிகாட்டுதலை தனியார் மருத்துவமனைகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான மருத்துவமனைகளில் இதனை பின்பற்றுவதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருக்கின்ற ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு நோயாளி ஒருவரிடமிருந்து 19 நாளுக்கு 12.20 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது புகார் எழுந்திருக்கிறது.இதனைத் தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அனுமதியை ரத்து செய்வதற்கு தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி அதிக வசூல் செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதே சமயத்தில் தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்க படுகின்ற கட்டணங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.