தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா 3-வது அலை வேகமெடுக்க தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அந்த வகையில் தினசரி இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக அரசு முன்னெடுத்த நடவடிக்கையினால் தான் கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்று கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் தற்போது 444 பேர் கொரோனாவால் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்று கூறிய சுகாதாரத்துறை செயலாளர் 1.13 கோடி பேர் இன்னும் 2-வது டோஸ் தடுப்பூசியை முறையாக செலுத்தி கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.