கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில், அகமதாபாத்தில் உள்ள சனந்தில் நடந்த ஒரு மத நிகழ்வின்போது ஆயிரக்கணக்கானோர் திரண்ட வீடியோ இணையத்தில் பரவி நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத்தில் சனந் எனும் ஊரில் அண்மையில் நடந்த ஆன்மீக விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்தாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அம்மன் கோயிலுக்கு பால்குடம் எடுப்பது போன்ற நடைபெற்ற இந்த மத திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி ஊர்வலமாக குடம் தூக்கி சென்றுள்ளனர். ஆனால் இந்த கூட்டத்தில் யாரும் முகக்கவசம் அணிந்தோ அல்லது சமூக இடைவெளியை பின்பற்றுவதையோ கடைப்பிடிக்கவில்லை என்பதை பார்க்கமுடிகிறது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மூச்சுத்திணறலாலும், படுக்கை கிடைக்காமல் மக்கள் திண்டாடும் இந்த சூழலிலும், இத்தகைய விழாக்கள் அவசியம் தானா என இணையத்தில் ஆதங்கத்தோடு கமெண்ட் பதிவிட்டுவருகிறார்கள்.