கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு புதிய அவதாரத்தை எடுத்து வருகிறது. பெங்களூருவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது 20 ஆயிரமாக இருக்கிறது. இதனால் பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாநகராட்சி, சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் பாதிப்பு எண்ணிக்கை தினசரி உயர்ந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக பெங்களூருவில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு 144 தடை உத்தரவானது அமல்படுத்தப்பட்டது.
இந்த தடை உத்தரவு நாளை அதிகாலை 5 மணியுடன் நிறைவுக்கு வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் 144 தடை உத்தரவை நீட்டித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக பெங்களூருவில் (நாளை) காலை 5 மணி வரை 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் இந்த 144 தடை உத்தரவு வருகிற 31-ந் தேதி தடை வரை நீட்டிக்கப்படுகிறது.
ஆகவே 144 தடை அமலில் இருக்கும்போது பெங்களூருவில் பேரணி, ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தர்ணா, போராட்டங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. திருமண நிகழ்ச்சியில் 200 பேர் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்வதற்கு எந்த தடையும் இல்லை. மேலும் ஒரே இடத்தில் 5 நபர்களுக்கு மேல் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது தேசிய பேரிடர் மேலாண்மை, கர்நாடக நோய் பரவலை தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.