தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள்,கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற பொது இடங்களில் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் காய்ச்சல் பரிசோதனை, கிருமிநாசினி வைத்தல், கிருமிநாசினி தெளித்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கட்டாய முக கவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். கொரோனா பாதித்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். பொதுமக்கள் யாராவது காய்ச்சல் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மாவட்டம் முழுவதும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.