கேரளாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதிலும் ஒரே நாளில் 17,755 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் 4,694 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து மாநில சுகாதாரதுறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரளா முழுவதிலும் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று முதல் வழிபாட்டு தலங்களில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணங்கள், இறுதி சடங்குகளிலும் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவல் அதிகமுள்ள திருவனந்தபுரத்தில் பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் 50 பேருக்கு மேல் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என்றும் அரசு அறிவித்துள்ளது. மேலும் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட மாநாடுகள், பொதுக் கூட்டங்களை ஒத்திவைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதை தவிர மாநிலம் முழுவதிலும் உள்ள கோர்ட்டுகளில் நாளை முதல் ஆன்லைன் மூலம் விசாரணையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கோர்ட்டு நடவடிக்கைகளையும் ஆன்லைன் மூலமாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கோர்ட்டுகளில் நடக்க வேண்டிய வழக்கு விசாரணையை கோர்ட்டு அறையில் நடத்த வேண்டுமா..? அல்லது ஆன்லைனில் நடத்தலாமா…? என்பதை நீதிபதி முடிவு செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கேரள மாநிலத்தில் இன்று முதல் அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள் பிப்ரவரி 11ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. அரசின் அறிவிப்பின்படி கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை காவல்துறையினர் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.