கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பு தெரிவிப்பவர்களுக்கு இலவச சிகிச்சை கிடையாது என அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறிய முயற்சி உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது கொரோனா தடுப்பூசி பெரும்பாலான நாடுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் மக்கள் அதனை போட்டுக் கொள்வதற்கு மிகவும் தயங்குகிறார்கள்.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பு தெரிவிப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அதற்கான சிகிச்சை செலவை அரசு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதை ஏற்க முடியாது என பெங்களூரு மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத் பிரசாந்த் தெரிவித்துள்ளார். அரசு சுகாதார மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு இலவச தடுப்பூசி போடும் போது, மக்களும் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு இலவச சிகிச்சை கிடையாது என அறிக்கை அனுப்ப உள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.