கொரோனா பரிசோதனைக்கு பின் தொற்று உறுதியான 110 வயது மூதாட்டி சிகிச்சைக்குப் பெற்று நேற்று பூரண குணமாகி வீடு திரும்பியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய வீரியத்தை தினந்தோறும் அடைந்து வருகிறது. அதுபோல் கர்நாடகத்திலும் 3 மாதங்களாக குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு சென்ற ஜூன் மாதம் முதல் ஜெட்வேகத்தில் உயர்ந்து உள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை 1.25 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அத்துடன் 2,500 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும் இந்த பயங்கர கொரோனாவானது வயதானவர்கள், கர்ப்பிணிகள் என அனைத்து தரப்பில் இருப்பவர்களையும் வயது வித்தியாசம் பாராமல் தனது கோரப்பிடியில் சிக்கவைத்து வருகிறது. வயதானவர்கள் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இதனால் வயது முதிர்ந்தவர்கள் பொது இடங்களில் சுற்றித்திரிய வேண்டாம் எனவும், வீடுகளில் தங்கியிருக்க அரசு வலியுறுத்தியும் வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா டவுனை சேர்ந்த 110 வயது மூதாட்டி காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக சித்ரதுர்கா மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் மூதாட்டி படிப்படியாக கொரோனாவில் இருந்து மீண்டு வந்தார். இதனால் நேற்று அவர் பூரணமாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டார். கொரோனாவில் இருந்து குணமடைந்த மூதாட்டி சித்ரதுர்கா டவுன் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தனது பேரனுடன் சித்ரதுர்காவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.