கொரோனா இறப்புகளுக்கு இழப்பீடு கோருவதற்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் காலக்கெடு விதித்துள்ளது.
கொரோனாவால் பலியானவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. நேற்று காலை நிலவரப்படி இந்தியாவில் இதுவரை 5 லட்சத்து 23 ஆயிரத்து 654 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பலியானவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு கோருவதற்கு என்டிஎம்கே என்று அழைக்கப்படுகிற தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் காலக்கெடு நிர்ணயித்து ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் “கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி முன்பு கொரோனா காரணமாக பலியானோருக்கு இழப்பீடு பெற விண்ணப்பிப்பதற்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். எதிர்காலத்தில் இனி நிகழக்கூடிய தொற்று இழப்புகளில் இழப்பீடு பெற விண்ணப்பதாரருக்கு இறப்பு நாளிலிருந்து 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். சுப்ரீம் கோர்ட் கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இழப்பீடு கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் விண்ணப்பம் பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இழப்பீடு வழங்குவதற்கும் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். உரிய காலகட்டத்தில் இழப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியாத நிலையில், அது பற்றி குறை தீர்ப்பாயம் அணுகலாம். அந்த குழுவின் மூலம் உங்களது இழப்பீட்டை கேட்டு விண்ணப்பிக்க முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.